80 களில் கமல் ஹாசன் எழுதிய 'தாயம்' என்ற கதையை இயக்குனர் பாலச்சந்தரை வைத்து படமாக்க முயற்சி செய்தார் கமல் ஹாசன். ஆனால் கதைக்களம் அதி நவீனமாக உள்ளதால் படத்தை அப்போது படமாக்கும் முயற்சியை கைவிட்டார். அதன் பின்னர் 2000 ம் ஆண்டில் பாலசந்தரின் உதவியாளர் சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து படமாக்க களம் இறங்கினார் கமல். பிரபல தயாரிப்பு நிறுவனம் வி கிரியேஷன் தயாரிப்பில தயாரிப்பாளர் எஸ் தானு இப்படத்தை தயாரித்தார்.‌ தமிழ், இந்தி இருமொழியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட படமான இது ஆளவந்தான்' என்ற பெயரில் தமிழிலும் 'அபெய்' என்ற பெயரில் இந்தியிலும் 2001 ல் வெளிவந்தது.

வித்யாசமான உளவியல் சிக்கலை பேசும் திரைக்கதையில் உலக நாயகன் கமல் ஹாசன் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு மாதிரி தோரணையில் நடிப்பை வெளிபடுத்தி மிரட்டியிருப்பார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்தார். மேலும் படம் பிரம்மாண்டமாகவும் டெக்னிக்கலாக சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதால் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள், கருவிகள் வெளிநாட்டில்ருந்து இறக்கி படமாக்கியிருப்பார்கள். அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றுஇந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியில் இறங்கி பார்வையாளர்களுக்கு வித்யாசமான மற்றும் பிரம்மாண்டமான உணர்வை கொடுப்பதற்காக படக்குழு இறங்கியது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஆளவந்தான் பெரும் தோல்வியை பெற்றது. படத்திற்காக படக்குழு கையிலெடுத்த புதிய யுக்திகள் என்று கமல் பார்த்து பார்த்து செய்த விஷயங்கள் எல்லாம் படத்தை பார்வையாளர்களுக்கு ஒன்றவிடாமல் செய்து விட்டது. அதனாலே படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் தோல்வி அடைந்தது. ஆனால் வழக்கம் போல கமல் ஹாசன் திரைப்படங்கள் பத்து வருடம் கழித்து புரிந்து வரவேற்பு கிடைப்பது போல சமீபத்தில் ஆளவந்தான் படத்திற்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் படத்தை புகழ்ந்தும் படத்தின் இடம்பெற்ற சிறப்பு காட்சிகள், கதைக்களம் எல்லாம் கட்டுரையாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட இயக்குனர்களும் அதிகம் குறிப்பாக ஹாலிவுட் பிரபல இயக்குனர் குவண்டின் டாரண்டினோ தனது படத்திலும் ஆளவந்தான் படத்தில் வரும் அனிமேஷன் யுக்தியை கையாண்டிருப்பார்.

தமிழ் சினிமா ரீ ரிலீஸ் என்ற திட்டத்தில் கமல் ஹாசனின் ஆளவந்தான் படம் வெளிவர வேண்டும் என்று பட தயாரிப்பாளரான தானுவிடம் ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் படம் வெளியாகி 22 ஆண்டுகளை கடந்த நிலையில் மக்கள் மத்தியில் ஆளவந்தான் ரீ ரிலீஸ் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் தானு இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். அவருடைய முந்தைய தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்பட விளம்பர சந்திப்பில் ஆளவந்தான் ரீ ரிலீஸ் குறித்து விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளவந்தான் திரைப்படம் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் தானு. இதனை தனது சமூக வலைதளத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். அப்பதிவுடன் படத்தில் பணியாற்றிய வெளிநாட்டு தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் இணையத்தில் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

பொதுவாகவே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு அவரது படங்களின் விளம்பர திட்டங்களை தனித்துவமாக கையாளக் கூடியவர். பிரம்மாண்டமான விளம்பரங்கள் என்றால் இவருடைய படங்களில் எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகாவும் விநியோகஸ்தராகவும் இருக்கும் இவர் 80 களின் பிற்பகுதியில் இருந்து பல வெற்றி படங்களை தயாரித்தவர். மக்களின் எதிர்பார்ப்பையும் ரசனையையும் கருத்தில் கொண்டு துணிச்சலுடன் பல விஷயங்களை செய்யக் கூடியவர் தயாரிப்பாளர் எஸ் தானு. மக்களின் வரவேற்பு கிடைக்காமல் தோல்வி படமாக அன்று ஆளவந்தான் திரைப்படம் இருந்தாலும் விமர்சன ரீதியில் இன்று வெற்றி படமாக பேசப்பட்டு வருகிறது. அதனை கருத்தில் கொண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ஆளவந்தான் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய முன் வந்திருக்கிறார். இதனையடுத்து திரை விமர்சகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.