தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கும் அடுத்த பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா. தொடர்ந்து தரமான படைப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக உலகின் முன்னணி VFX நிறுவனத்துடன் இணைந்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் லண்டனில் தங்கியிருந்து வாடிவாசல் படத்திற்கான CG பணிகளை கண்காணித்து வருகிறார். ஏற்கனவே வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நிறைவடைந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனது திரைப்பயணத்தில் 42வது திரைப்படமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிவா எழுதி இயக்குகிறார். கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதுவரை சூர்யாவின் திரைப்பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மிரட்டலான போர் காட்சிகள் உட்பட பல பிரம்மாண்டமான காட்சிகளுக்காக நிறைய VFX பணிகள் கங்குவா திரைப்படத்திற்காக மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் ஜூன் மாதம் கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என சமீபத்தில் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் 5 உச்ச நட்சத்திர நடிகர்கள் கங்குவா படத்தின் டீசருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்த ருசிகர தகவலை முன்னணி தயாரிப்பாளர் தனஜெயன் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டார். நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம், "கங்குவா படத்தின் டைட்டிலை சொன்ன போது சூர்யா அவர்களின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?" என கேட்டபோது, “இந்த டைட்டிலுக்கான முடிவு எடுத்தது சூர்யா சார் மற்றும் சிவா சார் தான். அவர்களுடைய எண்ணம் என்னவாக இருந்தது என்றால் டைட்டில் ஒரு உலகளாவிய டைட்டலாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழிகளில் அந்த டைட்டிலுக்கு ஒரு மதிப்பு இருக்க வேண்டும். எல்லோருக்கும் புரியக்கூடிய ஒரு டைட்டிலாக இருக்க வேண்டும், என்றுதான் அவர்கள் முடிவெடுத்தார்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சாருக்கும் அது பிடித்திருந்தது அதனால்தான் அந்த டைட்டிலேயே உறுதி செய்தார்கள்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.