வரும் ஜூலை 14 ம் தேதி ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’ மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியிருக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கிய இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். முன்னதாக வெளியான மாவீரன் பட டிரைலர் ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாக இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் மும்முரமாக படத்திற்கான விளம்பர வேலையில் இறங்கியுள்ளார். அதன்படி சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார். அதில் அவர் பேசியதாவது படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்க்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமே என்று என்னிடம் பலரும் சொல்கின்றனர். என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சினை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. அது நான் நடித்த படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு உள்ளது. அந்த படத்திற்கு வரும் பிரச்சினைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார். இந்த விஷயம் திரையுலகில் அதிகம் வரவேற்கப் பட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து குவிந்து வந்தது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கதினர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “திரைப்படம் தயாரிக்கும் பொழுது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்தும் இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இணையத்தில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.

திரையுலகில் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதன்படி கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே விமர்சன அளவிலும் வசூல் அளவிலும் கவனம் பெற்றது, அதை தொடர்ந்து தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் தயாரிக்கவிருக்கு திரைப்படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அனா பெண் நடிக்கும் இப்படத்தினை சர்வதேச மேடைகளை அலங்கரித்த கூழங்கல் பட இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.