தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார். கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் இளைய திலகம் பிரபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த செந்தமிழ் பாட்டு திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நடிகராக அறிமுகமானவர் கசான் கான். தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனின் கலைஞன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் வேடன் மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த கந்தர்வம் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர் கசான் கான், கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என்ன இரு மொழி திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசேத்திர வேடங்களில் கசான் கான் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இயக்குனர் சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் அவரது முதல் படமான முறை மாமன், தொடங்கி கார்த்தி நடித்த உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பிரபுதேவாவின் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கசான் கான், விஜயகாந்த் அவர்களின் தாயகம், தர்மா, வானத்தைப்போல, வல்லரசு, நரசிம்மா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் தளபதி விஜயின் திரைப் பயணத்தில் மிக முக்கிய படங்களில் ஒன்றான பிரியமானவளே திரைப்படத்திலும் குறிப்பிடப்படும் கதாபாத்திரத்தில் நடித்த கசான் கான் தொடர்ந்து பத்ரி படத்திலும் கோச் வேடத்தில் நடித்திருப்பார். குறிப்பாக விஜயின் பிரியமானவளே படத்தில் கசான் கான் தன்னுடைய ஆர்ம்ஸை உயர்த்தி 7 டைம்ஸ் 7 டைம்ஸ் என பேசும் வசனங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

கடைசியாக தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டய கிளப்பு படத்தில் நடித்த நடிகர் கசான் கான் மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்த தி கிங், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களிலும், திலீப் கதாநாயகனாக நடித்த மாயமோகினி, இவன் மரியாதை ராமன் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் கன்னடத்திலும் ஹப்பா மற்றும் நாக தேவதே ஆகிய படங்களில் கசான் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் கசான் கான் திடீரென மாரடைப்பால் காலமானார் என வெளிவந்திருக்கும் தகவல் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர் கசான் கான் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் நேற்று ஜூன் 12ஆம் தேதி நடிகர் கசான் கான் மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் கசான் கானின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ் மற்றும் மலையாள சினிமாவை சார்ந்த முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் நடிகர் கசான் கானின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.