இந்திய சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக தனது கவர்ந்து இழுக்கும் குரலினால் வசீகரித்து வரும் பாடகர் சங்கர் மகாதேவன். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியவர் சங்கர் மகாதேவன். இளமையிலே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் வல்லவராய் வளர்ந்த இவர் தொடர்ந்து பல நிகழ்சிகளில் மேடையேறி பின் திரைத்துறையிலும் கால் பதித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தேவா, எஸ் ஏ ராஜ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி ஒவ்வோரு பாடல்களையும் கவனம் பெற வைத்தார். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற மொழி முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி திரைத்துறையில் தனி கவனம் பெற்றார்.

முனுமுனுக்கும் பாடல்களை கவர்ந்திழுக்கும் குரலில் கொடுத்த இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம் பெற்ற என்ன சொல்ல போகிறாய், சங்கமம் படத்தில் இடம் பெற்ற வராஹ நதிக்கரையோரம், மின்சார கனவு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே, திருமலை படத்தில் நீயா பேசியது போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சங்கர் மகாதேவன். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வா தலைவா என்ற பாடலை பாடியுள்ளார். அதை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்ற ‘வீர ராஜ வீர’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பின்னணி பாடகாராக மட்டுமல்லாமல் ஆளவந்தான், யாவரும் நலம், விஸ்வரூபம் போன்ற பல படங்களுக்கு தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம் பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்கு சிறந்த பாடகர் என்ற தேசிய விருதினை பெற்றார். அதனுடன் மேலும் இரண்டு தேசிய விருதுகள் மற்றும் அதனுட்பட பல விருதுகளை குவித்து ரசிகர்களுக்கு மிக பிடித்த பாடகராக இருந்து வருகிறார் சங்கர் மகாதேவன்.

இந்நிலையில் பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு இங்கிலாந்து பார்மிங்ஹாம் நகரப் பல்கலைகழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கலை துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தனது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்; மேலும் திரைபிரபலங்கள் ரசிகர்கள் என சங்கர் மகாதேவனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.