இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களால் காதல் தேசம் திரைப்படத்தின் “கல்லூரி சாலை” பாடலின் மூலம் பாடகராக அறிமுகமான KK எனும் கிருஷ்ணகுமார், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவராக தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்.

தொடர்ந்து தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார், சீயான் விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன்.TR, மாதவன், ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட நட்சத்திர நாயகர்களின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக மின்சாரக்கனவு படத்தின் “ஸ்ட்ராபரி கண்ணே”, 12B படத்தின் “லவ் பண்ணு”, ரெட் படத்தின் “ஒல்லிக்குச்சி உடம்புக்காரி”, சாமி படத்தின் “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு”, கில்லி படத்தில் “அப்படிப் போடு”, மன்மதன் படத்தின் “காதல் வளர்த்தேன்”, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் “பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு”, அந்நியன் படத்தின் “அண்டங்காக்கா கொண்டைக்காரி”, சந்திரமுகி படத்தின் “அண்ணனோட பாட்டு”, உன்னாலே உன்னாலே படத்தின் “முதல்நாள் இன்று”, ஆடுகளம் படத்தின் “என் வெண்ணிலவே” உள்ளிட்ட பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை தன் குரலால் கொள்ளையடித்தார்.

கடைசியாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தி லெஜண்ட் படத்தில் “கொஞ்சி கொஞ்சி” & “போ போ போ” ஆகிய பாடல்களை பாடினார். இதனிடையே நேற்று (மே-31) கொல்கத்தாவில் பாடகர் KK திடீரென மாரடைப்பால் காலமானார் எனும் செய்தி இந்திய சினிமா ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கொல்கத்தாவின் நஸ்ருள் மன்சா அரங்கில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற KK, நிகழ்ச்சி முடிந்து தனது ஹோட்டலுக்கு திரும்பினார். அப்போது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட KK உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

என்றும் நம் நினைவுகளை விட்டு நீங்காத பாடல்களை கொடுத்து நமது இதயங்களில் குடியிருக்கும் பாடகர் KK எனும் கிருஷ்ணகுமாரின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

SHOCKING : பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் உயிரிழந்தார்.

கொல்காத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தமிழில் உயிரின் உயிரே (காக்க காக்க), அப்படி போடு(கில்லி) உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் கேகே.#RIPKrishnakumarKunnath#RIPKK 💔 pic.twitter.com/pLYsPI4zBN

— Galatta Media (@galattadotcom) June 1, 2022