ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் உருவான விதம் மற்றும் ஏ ஆர் ரகுமான் மணிரத்தினம் இருவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்தார். அதில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அகநக பாடல் உருவான விதம் குறித்து பேசுகையில்,

“பாடல் குறித்து ரஹ்மான் சார் நிறைய சொல்வார். அகநக பாடலுக்கு ட்யூன் எழுத கொடுத்தார்.‌ நான் கேட்டுட்டு எப்படி சார் இது எழுத முடியும்‌.‌ நான் எங்க வார்த்தைகளை உடைத்து எழுத முடியும். ஆறு எழுத்துக்களில் ஒரு பல்லவி வெச்சா யார் சார் கேட்பா? என்று கேட்டேன். அவர் அப்போ இரண்டு இரண்டு எழுத்தா எழுதுங்க என்றார். இது போன்ற நிறைய ஐடியா கொடுப்பார்." என்றார்.

பின் தொடர்ந்து அகநக பாடல் குறித்து பேசுகையில், "அகநக பாடல் குறித்து மணி சார் சொல்லும் போது இரண்டு விஷயம் அந்த பாடலில் இருக்க வேண்டும் என்றார். ஒன்று குந்தவைக்கு வந்தியதேவன் மீது இருக்கும் காதல் அல்லது ஈர்ப்பு. அது அந்த பாடலில் எதார்த்தமாக சொல்ல வேண்டும். வெளிப்படையா சொல்லக்கூடாது. இரண்டாவதாக குந்தவைக்கு தன்னுடைய தேசத்தின் மீது இருக்க கூடிய பெருமிதம் கலந்த உடமை உணர்வு குறித்து வேண்டும்‌ என்று குறிப்பு சொன்னார். அதன்படிதான் அந்த பாடல் உருவானது." என்றார் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான அகநக பாடலின் சிறிய பகுதி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிகம் பேசபட்டது. பின் அந்த பாடல் இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக இடம் பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடிய இந்த பாடல் இணையத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளது. தமிழை போல இந்த பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் உருவானவிதம் குறித்து பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..