இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படமாக தயாரான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக ஏகோபித்த வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டு இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி 500 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்தது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, வரலாற்று புனைவு நாவலின் திரை வடிவமான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அட்டகாசமான ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான படத்தொகுப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றார்.

மக்களின் மனம் கவர்ந்த பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் பாகம் 1 வெற்றியை தொடர்ந்து பாகம் 2 திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் வேட்டையும் ஆரம்பத்திலேயே அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முன்பதிவுகளில் மட்டும் இதுவரை 5 லட்சம் டாலர்களை கடந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரிலீசுக்கு பிறகு இன்னும் அதிகமாகும் பட்சத்தில் பல வசூல் சாதனைகளை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ பதிவு இதோ…