இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படமாக தயாரானது தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பலமுறை முயற்சித்த பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் அந்தக் கனவை நிஜமாக்கியவர் இயக்குனர் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று புனைவு நாவலின் திரை வடிவமான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர்.

முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அட்டகாசமான ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான படத்தொகுப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றார். ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏகோபித்த வரவேற்பு கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 2 திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலாக அக நக பாடல் தற்போது வெளியானது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வரிகளில் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் அவர்கள் பாடியுள்ள ரம்மியமான அந்த அக நக பாடல் இதோ…