தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சி காலத்தை தன் படைப்புகளால் கொடுத்து அழகு சேர்த்தவர் இயக்குனர் இமயம் பாரதி ராஜா. கடந்த 1977ல் உலகநாயகன் கமல் ஹாசன். ரஜினிகாந்த், ஸ்ரீ தேவி ஆகியோர் நடிப்பில் வெளியான ’16 வயதினிலே’ படம் மூலம் இயக்குனராய் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் பாரதி ராஜா. அதன் பின்னர் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களின் திருப்புமுனைகளை தந்த பெருமைக்குரியவர். இவர் மக்களையும் கிராமிய வாழ்வியலையும் எதார்த்த திரைப்படங்கள் மூலம் கொடுத்து ஜனரஞ்சகமாக அப்படத்தை வெற்றி பெற வைத்தவர்.

காலத்தாலும் எளிதில் கடந்து முடியாத காவியங்களை திரையுலகிற்கு கொடுத்து இன்று திரையுலகின் மூத்த திரைக்கலைஞராய் வலம் வருகிறார். இயக்குனராய் மிகப்பெரிய இடத்தை பிடித்த இயக்குனர் பாரதி ராஜா நடிகராகவும் பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறனையும் மக்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் சமீப காலமாக பல படங்களில் பாரதி ராஜா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, இயக்குனர் அருண் மாதேச்வரனின் ‘ராக்கி’, அருள்நிதியின் ‘திருவின் குரல்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாரதிராஜா தன் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன் மூலம் உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு தற்போது பழனி போன்ற பகுதிகளில் படமாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா உடல்நிலை குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நலம் பூரண குணமடைய அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிராத்தனை செய்து வருகின்றனர். அதன்படி கவிஞரும் எழுத்தாளரும் பிரபல பாடலாசிரியருமான கவிபேரரசு வைரமுத்து அவர்கள் பாரதிராஜாவினை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அப்போது வைரமுத்து அவரது வாழ்த்து கவிதையை தென்பாண்டி சீமையிலே பாடல் மெட்டில் பாடி இயக்குனர் பாரதிராஜாவை உற்சாகமடைய செய்த்துள்ளார். கவிபேரரசின் கவிதையை கேட்ட பாரதி ராஜா 100 மருத்துவர்கள், விஞ்ஞானிகள் வந்து என்னை எழுப்புவதை விட கவிஞரின் இந்த வரிகள் என்னை எங்கையே கொண்டு போய் வைக்கிறது.” என்று பாரதி ராஜா தனது மகிழ்ச்சியினை பகிர்ந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. பாரதிராஜா இயக்கத்தில் 1980ல் வெளியான ‘நிழல்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியாராக வைரமுத்து அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.