தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகரும் இயக்குனருமானவர் சமுத்திரகனி. குறிப்பாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்தும் அப்படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் சமுத்ரகனி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ப்ரோ’. கடந்த 2021 ல் சமுத்ரகனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்து நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘வினோதய சித்தம்’ இப்படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவாகும் ப்ரோ படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்க சமுத்ரகனி கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிற்காக பல மாற்றங்களை செய்து இயக்குனர் திருவிக்ரம் வசனங்களில் உருவான ப்ரோ படத்திற்கு இசையமைத்துள்ளார் தமன். ப்ரோ படத்திற்கு தெலுங்கு ரசிகர் மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அதன்படி வரும் ஜூலை 28ம் தேதி பிரம்மாண்டமாக ப்ரோ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ப்ரோ படத்தின் ப்ரீ – ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பவன் கல்யான் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய பவன் கல்யான் தமிழ் நாடு திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழாவில் பவன் கல்யாண் பேசுகையில், "தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு வேலையை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். தமிழ் மொழி படங்களில் தெலுங்கு கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். தெலுங்கு படங்களில் தமிழ் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். மற்ற மொழி கலைஞர்கள் பணியாற்றுவதால் தான் இன்று தெலுங்கு திரையுலகம் செழிப்பாக உள்ளது. கேரளாவை சேர்ந்த சுஜித் வாசுதேவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்; படத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட நீதா லுல்லா ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். இப்படி அனைத்து பகுதியிலிருந்து கலைஞர்கள் பங்கேற்றால்தான் சிறந்த படத்தைக் கொடுக்க முடியும். 'ப்ரோ' படத்தை இயக்குவதற்காக சமுத்திரக்கனி தெலுங்கு படிக்கக் கற்றுக கொண்டார். குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசிக்க வேண்டும். அப்படி இருந்தால் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தையும் கொடுக்க முடியும். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ரோஜா, ஜென்டில் மேன் போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். கலைஞர்களுக்கு சாதி, மதம் என எதுவும் கிடையாது. அதனால் தமிழ் சினிமாவில் தமிழ்க் கலைஞர்கள் மட்டுமே பங்கற்க வேண்டும் என்ற புதிய முடிவை பரிசீலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார் நடிகர் பவன் கல்யாண்

முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில், தொழிலாளர் நலன் கருதி மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) முன்னதாக புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.