பாகிஸ்தானில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடுவது உறுதி என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டிகளில் விளையாடு உள்ளதாகக் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த போட்டிகளில் விளையாட விருப்பம் இல்லை என்று டி 20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்ளிட்ட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி, பாகிஸ்தான் செல்லுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள சூழல் குறித்து, ஆராய இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியிருந்தது. அதற்கு, பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும், அந்நாட்டு வீரர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, திட்டமிட்டபடி, இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்று விளையாடும் என்று, இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

இதனிடையே ஏற்கனவே அறிவித்தபடி மலிங்கா, மாத்யூஸ், திசரா பெரேரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், பாதுகாப்பு காரணங்களைக் கூறி, இந்த தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளனர்.