ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், சிபிஐ காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை வரும் 19 ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அப்போது, திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என ப.சிதம்பரத்தின் கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், ப.சிதம்பரத்தைத் தனி அறையில் வைக்க வேண்டும் என்றும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் மருந்துகள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, வெளியே வந்த ப.சிதம்பரத்திடம் திகார் சிறைக்குச் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, “நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன்” என்று ப.சிதம்பரம் பதில் கூறினார். அதேபோல், இதற்கு முன்பாக நீதிமன்றம் வந்தபோது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி ஜிடிவி 5 சதவீதமாகக் குறைந்துள்ளதைக் குறிப்பிட்டு, “5 சதவீதம், நான் சொல்லும் 5 சதவீதம் எது என்று தெரிகிறதா?” என்ற அவர் கேள்வி எழுப்புவதுபோல் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.