நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீதான தடைகள் அனைத்தையும் நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடிக்க, ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கூடுதல் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக கொடி கட்டி பறந்த சில்க் ஸ்மிதா இருக்கிறார். அதாவது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உருவம் கொண்ட நடிகையை நடிக்க வைத்திருக்கின்றனர் என தெரிகிறது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதனிடையே லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் அவர்களிடம் 21 கோடியே 29 லட்ச ரூபாயை கடனாக பெற்றிருந்தார். இந்தக் கடனை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது சார்பில் நடிகர் விஷால் உடன் லைகா நிறுவனம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி இந்த கடன் தொகையை முழுவதுமாக திருப்பி செலுத்தும் வரை நடிகர் விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திடம் வழங்கப்படும் என்ன உத்திரவாதம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் கடன் தொகையை செலுத்தாமல் தனது "வீரமே வாகை சூடும்" திரைப்படத்தை வெளியிடும் பணிகளில் விஷால் ஈடுபட்டார். எனவே திரைப்படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் OTT ஆகியவற்றின் உரிமைகளுக்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்றத்தில் லைகா வழக்கு தொடர்ந்தது. இந்த வாழ்க்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த 15 கோடி ரூபாயை இன்னும் விஷால் நீதிமன்றத்திற்கு செலுத்தவில்லை என்று, வருகிற 15 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் லைகா தரப்பில் வாதிடப்பட்டது.

இது குறித்த விசாரணைக்கு இன்று செப்டம்பர் 12ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீதான தடையை நீக்கிய உயர்நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணையை ஒத்தி வைத்திருப்பதாக தெரிகிறது. எனவே எந்த தடையும் இன்றி மார்க் ஆண்டனி திரைப்படம் திட்டமிட்டபடி வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டிருக்கின்றன.