நடிகர் நிழல்கள் ரவி அவர்கள் சினிமாவில் தனக்கு சம்பளமாக வழங்கப்பட்ட செக்குகள் பவுன்ஸ் ஆனது குறித்து பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாய் தரமான குணச்சித்திர நடிகராக மக்களின் மனதை வென்றவர் நடிகர் நிழல்கள் ரவி. கடந்த 1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அவர்களின் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கிய நிழல்கள் ரவி அவர்கள், தொடர்ந்து ஸ்ரீ ராகவேந்திரர், சின்னத்தம்பி பெரியதம்பி, மீண்டும் லிசா, நாயகன், வேதம் புதிது, மாப்பிள்ளை, சிங்காரவேலன், ஆசை, இந்தியன், அருணாச்சலம், அண்ணாமலை, சிட்டிசன், சிங்கம், ராட்சசன், பொன்னியின் செல்வன், மார்க் ஆண்டனி என எக்கச்சக்கமான திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்த நடிகர் நிழல்கள் ரவி அவர்கள், தனது திரைப்பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “உங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு?” என கேட்டபோது, “முதல் சம்பளம் நிழல்கள் படத்திற்கு 5500 ரூபாய்.. அப்போது அது பெரிய பணம். பாரதிராஜா சார் அவர்களின் கையால் சரியாக கமல்ஹாசன் சார் அவர்களின் ரூமில், ஆழ்வார்பேட்டையில் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள் பர்ஸை திறந்து 1001 ரூபாய் முதல் நாளில் கொடுத்தார்கள்.. 1980ல்... கையில் கொடுத்து "வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையில் அதை மறக்கவே முடியாது. அதன் பிறகு வாழ்க்கையில் எல்லாமே வளர்ச்சி தான்.” என்றார்

தொடர்ந்து அவரிடம் பேசும் போது "நீங்கள் இப்போது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போதும் நீங்கள் ஒரு படத்தில் நடிக்கும் போது எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என டிமாண்ட் செய்து கேட்க முடியுமா?" எனக் கேட்டபோது, “இல்லை நான் இது வேண்டும் இவ்வளவு வேண்டும் அவ்வளவு வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை தயாரிப்பு பொறுத்து தான் கேட்பேன்.” என்றார். மேலும் அவரிடம், "சிலர் நடிகர்கள் என்றால் இப்படி கராராக கேட்டு தான் வாங்க வேண்டும் என்று சொல்வார்களே?" எனக் கேட்ட போது, “நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். நடிகர்கள் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது. நீங்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருக்க முயற்சிக்க வேண்டும். என்னிடம் இவ்வளவு செக்குகள் இருக்கின்றன. அவை அனைத்தும் பவுன்ஸ் ஆன செக்குகள். அதை நாம் என்ன செய்வது, சில தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியும் சில தயாரிப்பாளர்கள் கொடுக்க முடியாது .சில தயாரிப்பாளர்களால் படமே எடுக்க முடியாமல் போய்விடும். செக் கொடுப்பார்கள் அது பவுன்ஸ் ஆகிவிடும் அதற்காக நடிகர் சங்கத்தில் போய் புகார் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இப்படி போனது என்றால் ஆண்டவன் வேறு ஒரு வழியில் நமக்கு கொடுப்பான் அவ்வளவு தான்” என தெரிவித்திருக்கிறார். மேலும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் நிழல்கள் ரவி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.