தனக்கென தனி பாணியில் டார்க் காமெடி மற்றும் ஆக்சன் கலந்து பக்கா என்டர்டெய்னிங்கான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் இயக்குனர் நெல்சன். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் தனது இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்தார். அப்படி உருவான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தனது மூன்றாவது படத்தில் முதல் முறையாக தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் கைகோர்த்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணத்தினால் பீஸ்ட் திரைப்படம் ட்ரோல் செய்யப்பட்டது, அதனால் இயக்குனர் நெல்சனும் ட்ரோல் செய்யப்பட்டார். இந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்களுக்கும் ட்ரோல்ல்களுக்கும் இடையில் தனது 4வது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த இயக்குனர் நெல்சன் உருவாக்கிய அதிரடியான திரைப்படம் தான் ஜெயிலர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகி பக்கா மாஸ் என்டர்டெய்னராக உலகம் முழுவதும் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் நெல்சன் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசியபோது, “ஜெயிச்சிட்டோம் மாறா என்பது போல் தற்போது எல்லோரும் நெல்சன் என்ற பெயர் போய் நெல்சா.. நெல்சா.. என்று உங்களை சொந்தமாக்குகிறார்கள்.. என்னென்ன பாராட்டுகளை கேட்கிறீர்கள் யாரெல்லாம் பாராட்டினார்கள்?” எனக் கேட்டபோது, “நிறைய பேர் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் துறையில் இருப்பவர்கள் எல்லோருமே போன் செய்து சொன்னார்கள் நிறைய பேரை நான் இங்கே குறிப்பிட வேண்டாம் என நினைக்கிறேன். பாராட்டுக்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் வசூல் அட்டகாசமாக இருக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் மிகவும் என்ஜாய் பண்ணுகிறார்கள். நாங்கள் இதற்கு முன்னால் இப்படி பார்த்ததே இல்லை அந்த மாதிரி இருக்கிறது தியேட்டர்கள் என சொல்லுகிறார்கள். சொல்லுபவர்கள் எல்லாம் அதுதான் சொல்கிறார்கள். அவ்வளவு ஃபயராக இருக்கிறது. எங்களாலும் முடியவில்லை தியேட்டர்களுக்குள் இருக்கும் எனர்ஜி அவ்வளவு அதிகமாக இருக்கிறது என சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால் அதை மனதில் வைத்து தான் இந்த படமே பண்ணோம்." என இயக்குனர் நெல்சன் தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நெல்சனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.