லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படமாக உருவாகும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகிகளில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் திகழ்பவர் நடிகை நயன்தாரா. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல், மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் லூசிபர் ரீமேக்காக காட் பாதர், பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து கோல்ட் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகை நயன்தாரா தொடர்ந்து O2 மற்றும் கனெக்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

இதனிடையே முதன்முறை ஹிந்தி சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் ஜவான் திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அடுத்ததாக மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்குனர் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நடிக்க இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தமிழில் டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக உருவாகும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் இந்த லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்சுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கைதி & மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

ZEE ஸ்டூடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் & ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டப்பிங்கில் நடிகர் ஜெய் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டிருப்பதாக பட குழு தனது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த பதிவு இதோ…