இந்திய சினிமா தரத்தினை ஒரு படி மேல் கொண்டு சேர்த்த மிக முக்கிய படங்களான ஜோதா அக்பர், லகான், தேவ்தாஸ், காந்தி போன்ற பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் பாலிவுட் பிரபலம் நிதின் தேசாய், பிரம்மாண்டமான செட் என்றாலும் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு கொண்டு போகும் திரைப்படத்திற்கு தேவையான செட் என்றாலும் கச்சிதாமாக நேர்த்தியாக கொடுத்து அப்படத்திற்கு உயிர் கொடுத்து கவனம் சேர்ப்பவர் கலை இயக்குனர் நிதின் தேசாய். உயிரோட்டமான இவரது கலை இயக்கத்திற்காக இதுவரை நான்கு முறை தேசிய திரைப்பட விருதை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பிலிம் பேர் விருது, மாநில விருது. IFA விருது என புகழின் உச்சியில் இருந்தவர் நிதின் தேசாய்.

1989 ல் வெளியான பரிந்தா என்ற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்ந்து அமீர் கான், அஜய் தேவ்கான், ஷாருக் கான், சல்மான் கான், சஞ்சய் தத் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை பார்த்துள்ளார். இவர் கலை இயக்குனராக பல முக்கியமான படங்களுக்கு கலை இயக்கம் செய்தது மட்டுமல்லாமல் அஜிந்தா, ஹெலோ ஜாய் ஹிந்து போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் அதனுடன் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டில் சந்திரகாந்த் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தேஷ் தேவி என்ற படத்தையும் தயாரித்து தயாரிப்பாளாராக உருவெடுத்தார்.

பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி அந்தஸ்தை கொண்டிருக்கும் நிதின் தேசாய் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி திரையுலகினரையே அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. மும்பையில் தனக்கு சொந்தமான ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிதின் தேசாய் (57) உடலை போலீஸ் அதிகாரிகள் மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் கலை இயக்குனர் நிதின் தேசாய் அவர்கள் நிதி நெருக்கடியினால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகிறது. மும்பையில் நிதின் தேசாய்க்கும் சொந்தமான என். டி ஸ்டுடியோவிற்காக கடந்த 2016 2018 ஆண்டுகளில் ரூ 180 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளதாகவும் 2020 ஆண்டில் இருந்தே அக்கடனை திருப்பி செலுத்த ஏற்பட்ட சிக்கல்களினாலும் இப்படி அவர் செய்திருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர் பேசி வருகின்றனர். பல்வேறு முக்கிய படங்களுக்கு தனது உழைப்பை கொடுத்து கவனம் ஈர்த்த நிதின் தேசாயின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.