இந்திய சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல திரைப்படங்களுக்கு பணியாற்றி இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் இந்திய நாட்டின் பெருமைக்குரிய கலைஞராகவும் இருந்து வருபவர் ஏஆர் ரஹ்மான். தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் தமிழில் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் மற்ற மொழிகளில் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பிரபல வயலின் கலைஞர் எல் சுப்ரமணியத்துடனான உரையாடல் நேர்காணல் வீடியோவை சமீபத்தில் அவரது யூடியூப் தளத்தில் பதிவிட்டு இருந்தார் அதில் அவர் கடந்து வந்த பாதை முதல் எதிர்கால திட்டம் வரையிலான சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் இதில் பழைய முறையில் இருந்து இருந்து எப்படி புது முறையில் இசையமைத்தது என்பது பற்றியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பயன்படுத்தி பல முயற்சிகளையும் சோதனைகளையும் செய்ய முடிந்தது என்பது குறித்து விளக்கினார். மற்றும் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படங்கள் ஏன் விருதுகளைப் பெறுவதில்லை என்பது குறித்து ஏ ஆர் ரஹ்மான் பேசினார். அதுகுறித்து அவர் பேசிய கருத்து தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

அவர் பேசியது,

"சில நேரங்களில் நமது திரைப்படங்கள் ஆஸ்கர் வரை செல்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதில்லை. அதே சமயம் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகின்றன. அதை பார்க்கும் போது அதை அனுப்ப வேண்டாம் எனத் தோன்றும். நாம் திரைப்படங்களை அனுப்புவதற்கு முன் மேற்கத்திய பார்வையில் இருந்து படங்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்!” என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 81வது ஆஸ்கர் விழாவில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை பிரிவில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்த விருதுகளை ஏ ஆர் ரகுமான் பெற்ற பின் இந்திய திரைப்படங்கள் மீது உலக நாடுகளின் கவனம் மேலும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கார் விருதுய் விழாவில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் விருது பெறுவதற்கு முன்பே இந்த உரையாடல் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.