தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவந்த பிசாசு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அரோல் கரோலி. பிசாசு படத்தில் இடம்பெற்ற “போகும் பாதை” பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக இப்பாடலில் இடம் பெறும் சோலோ வயலின் இசை பலரது ரிங்டோனாக ஒலித்தது மட்டுமல்லாமல் மனதிலும் ரீங்காரமிட்டது. தொடர்ந்து நடிகர் சூர்யா தயாரித்து நடித்த பசங்க 2 படத்திற்கு இசை அமைத்த அரோல் கரோலி மீண்டும் மிஷ்கின் நடித்து தயாரித்து வெளிவந்த சவரக்கத்தி மற்றும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

மேலும் அண்ணனுக்கு ஜே, இஃக்லு, இயக்குனர் சுசீந்திரனின் சாம்பியன் மற்றும் லாக்கப் ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள அரோல் கரோலி ஆட்டோ சங்கர் வெப் சீரிஸுக்கும் இசையமைத்துள்ளார். அடுத்ததாக அரோல் கரோலி இசையில் ரேஞ்சர், சிறகு, அன்புள்ள கில்லி, யாக்கை திரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் அரோல் கரோலி ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். இசையமைப்பாளர் அரோல் கரோலி & ரீத்து அரோல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை நேற்று (மார்ச் 2-ம் தேதி) பிறந்துள்ளதாகவும் தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் இசையமைப்பாளர் அரோல் கரோலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.