பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற உலக அளவில் நட்சத்திர கிரிக்கெட் வீரரான இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (Let's Get Married) திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்தது மக்களை மகிழ்வித்த மகேந்திர சிங் தோனி பின் திரையுலகில் களமிறங்க முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக LGM (Let's Get Married) என தமிழில் முதல் படத்தை தயாரித்துள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் LGM (Let's Get Married) படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓமணப் பெண்ணே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பூ படத்தின் இயக்குனர் சசி இயக்கத்தில் ரொமான்டிக் திரைப்படமாக நடித்திருக்கும் நூறு கோடி வானவில், அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடித்துள்ள டீசல் மற்றும் நடிகர் “அட்டகத்தி” தினேஷ் உடன் இணைந்து நடித்து வரும் லப்பர் பந்து உள்ளிட்ட திரைப்படங்கள் ஹரிஷ் கல்யாணின் கைவசம் இருக்கின்றன. அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி LGM (Let's Get Married) படத்தை இயக்கியுள்ளார்.

ஷரிஷ் கல்யாணுடன் இணைந்து லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ள LGM (Let's Get Married) படத்தில் நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்த LGM திரைப்படத்தின் டீசர் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி தோனி இருவரும் இணைந்து நாளை ஜூலை 10ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…