உலக அளவில் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரராகவும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரட் வீரராகவும் திகழும் மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமாவில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தனது தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் முதல் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு LGM (Let's Get Married) என பெயரிடப்பட்டுள்ளது. LGM திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா மற்றும் லவ் டுடே நாயகி இவானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக LGM (Let's Get Married) திரைப்படம் இருக்கும் என தெரிகிறது. முன்னதாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓ மண பெண்ணே மற்றும் நடிகை இவானா நடித்த லவ் டுடே ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த LGM (Let's Get Married) திரைப்படமும் தற்போது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரும் என பட குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக படப்பிடிப்பை நிறைவு செய்த LGM (Let's Get Married) படக்குழுவினர் கேக் வெட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இதோ…