மத்திய பிரதேசத்தில் முத்தம் கொடுக்க மறுத்த பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் ஜாபல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாபுரி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, ஜாபல்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பிஜாபுரி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு பெண், சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அங்குச் சென்று பார்த்தபோது, பள்ளி மாணவி தலையில் அடிபட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்த போலீசார், மாணவியின் ஆண் நண்பர் ராமன்சிங்கிடம் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரித்துள்ளனர். இதனையடுத்து, வேறு வழியில்லாமல், தான் கொலை செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்.

வாக்குமூலத்தில், கடந்த 5 ஆம் தேதி பள்ளி முடிந்ததும், மாணவியுடன் ராமன்சிங் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு அவர் முத்தம் கொடுக்க முயன்றதாகத் தெரிகிறது. இதனை அந்த மாணவி ஏற்க மறுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவன், மாணவியைப் பின்னோக்கி கீழே தள்ளியுள்ளார். இதில், கீழே விழுந்த அவருக்கு, தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் தான் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் அவன் வாக்கு மூலம் அளித்துள்ளான்.

இதனையடுத்து ராமன்சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.