சமீபத்தில் நடந்து முடிந்த 95வது ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் திரும்பத் திரும்ப கேட்கும் பாடல் என பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல் ஒன்றை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். இந்திய சினிமாவின் மிகப்பெரிய இசை ஜாம்பவான்களில் ஒருவராக திகழும் MM.கீரவாணி அவர்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். தமிழில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்த அழகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான MM.கீரவாணி அவர்கள் தொடர்ந்து நீ பாதி நான் பாதி, சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, ஸ்டூடன்ட் நம்பர் 1 என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களோடு இணைந்து MM.கீரவாணி பணியாற்றிய நான் ஈ, பாகுபலி 1 & 2, மற்றும் RRR ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் மொழிகளை கடந்து பலதரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்தன.

அந்த வகையில் RRR படத்தில் MM.கீரவாணி இசையில் வெளிவந்த நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பலனாக நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணியின் மனதை பிரபல இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கும் இசையமைத்தார். அடுத்தடுத்து ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, உள்குத்து, தொண்டன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், மான்ஸ்டர், டியர் காம்ரேட், தாராளபிரபு, நாடோடிகள் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் நெட்ஃபிலிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் மற்றும் நவரசா ஆகிய ஆந்தாலஜி வெப் சீரிஸ்களுக்கும் இசையமைத்தார்.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரபாஸ் நடிப்பில் பேன் இந்தியா படமாக வந்த ராதே ஷ்யாம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கட்டா குஸ்தி மற்றும் சமீபத்தில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த இராவணக் கோட்டம் ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ள ஜஸ்டின் பிரபாகரன் தான் தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்து வரும் அடியே படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய MM.கீரவாணி அவர்கள் “தான் திரும்பத் திரும்ப கேட்கும் பாடல் என்றால் அது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் டியர் காம்ரேட் படத்தில் இடம்பெற்ற, "கடலல்லா" (புலராத காலை) பாடல் தான்” என்றார். தொடர்ந்து “சமீபத்தில் அவரது (ஜஸ்டின் பிரபாகரன்) இசையில் மலையாளத்தில் வெளிவந்த பாச்சுவும் அத்புத விளக்கும் படத்திலும் பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதமாக இருந்தது” என ஜஸ்டின் பிரபாகரனின் இசையை MM.கீரவாணி அவர்கள் பாராட்டியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அந்த பேட்டியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நன்றி MM.கீரவாணி சார், குழந்தை பருவத்தில் இருந்தே உங்களது இசைக்கு பெரிய ரசிகன்... உங்களிடமிருந்து கிடைத்த இந்த அன்பு மிகவும் அர்த்தமுள்ளது. உங்களுடைய இந்த பாராட்டின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நான் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும். நன்றி!” என குறிப்பிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோ இதோ…