இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வெளிவந்த திரைப்படம் ‘மைக்கேல். மாநகரம் புகழ் சந்தீப் கிஷன் நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளுடன் உருவான திரைப்படமாய் திரைக்கு வந்த மைக்கேல் கடந்த பிப்ரவரி 3 ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. இப்படத்தில் சந்திப் கிஷனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் படத்திற்கு கூடுதலான எதிர்பார்ப்பும் உருவானது. படத்தின் டீசர், டிரைலரும் மக்களை வெகுவாக கவரும் அளவே இருந்தது. டீசர், டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், R.சத்ய நாராயணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கின்றனர். மேலும் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3 ம் தேதி வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. சிலர் படம் குறித்து பாராட்டியும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மைக்கேல் படத்திற்கு கிடைத்த விமர்சனம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, “எனது எல்லாப் படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசணையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும். மைக்கேல் - ஐ ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்ட செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி முன்னதாக தமிழில் புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அதிகம் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.