சென்னையில் 7 பெண்களைத் திருமணம் செய்து 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலி சப் இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூரைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், அமைந்தகரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி, வேலைக்குச் சென்ற அந்த பெண் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப் படை அமைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், அந்த பெண் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் பிரித்வி என்பவரே, அந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, ராஜேஷ் பிரித்வியின் சொந்த ஊரான திருப்பூர் அடுத்த நொச்சிபாளையத்தில் வீட்டில் சிறையாக்கப்பட்டிருந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இதனிடையே, தலைமறைவான ராஜேஷ் பிரித்வியை போலீசார் தேடி வந்தனர்.

அதில் அதிரடி திருப்பமாக, ராஜேஷ் பிரித்வியின் செல்போனில், மீட்கப்பட்ட பெண்ணை பேசவைத்த போலீசார், ராஜேஷ் பிரித்வியை வீட்டிற்கு நேரில் வரவழைத்தனர். இதனையடுத்து, நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ராஜேஷ் பிரித்வி, அந்த பெண்ணை தன்னோடு வரும்படியும், வரமறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த போலீசார், ராஜேஷ் பிரித்வியை சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இதுவரை இளம் பெண்களை ஏமாற்றி 7 திருமணங்கள் செய்துள்ளது தெரியவந்தது. அத்துடன், இதுவரை காதல் என்ற பெயரிலும், மிரட்டியும் இதுவரை 20 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், தாம் சப்-இன்ஸ்பெக்டர் வேலை செய்து வருவதாகவும், தனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்றும் கூறி, அமைந்தகரையில் கால்சென்டர் நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார். ஆனால், அதுவும் போலியான நிறுவனம் என்றும் தெரியவந்துள்ளது. இத்தனைக்கும், இவர் 7 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.