ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிக்கை தற்போது வெளியானது. தனது முந்தைய படங்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களால் தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்த தரமான படைப்பாக தயாராகியுள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து பேசியபோது "இது கொஞ்சம் வில்லன் மாதிரியும் இருக்கும்" என வடிவேலு அவர்கள் தெரிவித்து இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் புரட்சிகரமான கதையின் தாக்கியதாக கீர்த்தி சுரேஷும் மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். எனவே முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளதால் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் மாமன்னன் தான். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக வைகைப்புயல் வடிவேலு அவர்களின் உடல் மொழியும் பார்வையும் அற்புதமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது திரைப் பயணத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என சொல்லும் அளவிற்கு மிகவும் இயல்பாகவும் ஆக்ரோஷமாகவும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் தனது கதாபாத்திரங்களில் வெரைட்டி கொடுக்கும் ஃபகத் ஃபாசில் மாமன்னன் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு நல்ல தீனி கொடுக்க இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் ரசிகர்களை வழக்கம் போல் கட்டி போட்டு இருக்கிறார். நீண்ட காலமாக தான் பேச நினைத்த ஒரு சமூக நீதி பிரச்சனையை தரமான அரசியல் படமாக திரை வடிவமாக இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னனை உருவாக்கி இருக்கிறார். மாமன்னன் படம் குறித்த முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து இப்போது வரை நாளுக்கு நாள் அது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மாமன்னன் படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. மாமன்னன் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…