தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள் , கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்த சிறந்த படைப்பாக மாமன்னன் திரைப்படத்தை தற்போது வழங்கி இருக்கிறார். வைகைப்புயல் வடிவேலு , உதயநிதி ஸ்டாலின் , ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற மாரி செல்வராஜ் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் அவர்கள் தனது பயணம் குறித்து அதிரடியாக பேசியிருக்கிறார். அப்படி பேசுகையில்,

“எனக்கு மீண்டும் திரும்பி சென்று எல்லோருடனும் வாழ வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது. சினிமாவையே விட்டு செல்லலாம் என்றெல்லாம் தோன்றும். உடலும் மனமும் பலவீனமடையும் பொழுது கேள்விகளை புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் பொழுது, “அட பழையபடி ஊரில் இருந்தால் எவன் நம்மை கேட்கப் போகிறான். எப்படி வாழ்ந்தோம் நாம்... ஆற்றின் நடுவில் நின்று கத்தலாம்.” என்னமோ அப்படி தோன்றும். ஆனால் “மூன்றாவது படத்திலேயே நீ இப்படி பேசுகிறாயா?” என்றெல்லாம் சிலர் கேட்பார்கள். “டேய் மூணு படம் தானடா எடுத்து இருக்க” என்றெல்லாம் தோணலாம். ஆனால் அது என் மனம் சார்ந்தது. என்னுடைய வாழ்வு சம்பந்தப்பட்டது. என்னுடைய அரசியல் சம்பந்தப்பட்டது. நான் நடந்து வந்த பாதையை அறிந்தவர்களுக்கு தெரியும், நான் ஓடி வந்த பாதையை புரிந்தவர்களுக்கு தெரியும். நான் எங்க இருந்து பேசுகிறேன் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் நீ இரண்டு படம் தான் செய்து இருக்கிறாய் 3 படம் தானே செய்து இருக்கிறாய்… படம் எடுக்காத இயக்குனர்கள் கூட பேச முடியும். படம் எடுக்காவிட்டாலும் அவனுக்கு அவன் இயக்குனர் தான். அது 20 வயதாக இருந்தாலும் சரி 50 வயதாக இருந்தாலும் சரி அவன் எப்போது கனவு கண்டு விட்டானோ அப்போதே அவன் இயக்குனர் தான். அதற்கான எல்லா தகுதியும் அவனிடம் இருக்கிறது. அதற்கு இலக்கு கிடையாது. 50 படம் எடுத்த பிறகு தான் பேச வேண்டும் 10 படம் எடுத்த பிறகுதான் பேச வேண்டும் என்றெல்லாம் கிடையாது. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் என்ன செய்வது, இப்போதே பேசித்தான் ஆக வேண்டும். இதற்கு மேல் எல்லாம் காத்திருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாள் கழித்து பேசி இருக்கலாம் இன்னும் பத்து படம் கழித்து பேசி இருக்கலாம் அதெல்லாம் கிடையாது. எனக்கு தெரியும்… நான் ஓடுகிற ஓட்டத்திற்கும் ஆடுகிற ஆட்டத்திற்கும் கத்துகிற கத்துக்கு நான் எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பேன் என்றெல்லாம் எனக்கு தெரியாது. நான் மனம் திறந்து சொல்கிறேன் எனக்கு இன்று தோன்றக்கூடிய அரசியலை இன்றே பேச வேண்டும். இதை சரியாக பேசியாக வேண்டும். இருந்த பசிக்கு நான் இப்போது எவ்வளவோ பரவாயில்லை. இதற்கு மேல் ஒன்றை சம்பாதித்து நான் எதை சாப்பிட போகிறேன். எனக்கு நாட்கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் நான் 38 வயதில் என்னுடைய அமைதியை தான் யோசித்து கொண்டு இருக்கிறேன்” என பேசி இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த முழு பேட்டி இதோ…