படத்திற்கு படம் சமூக நீதி குறித்த அக்கறையோடு தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து உலகெங்கும் திரையரங்குகளில் ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. வைகைப் புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் மாமன்னன் திரைப்படம் வர்த்தக ரீதியில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாமன்னன் படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்றும் அன்பு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்தினம் அவர்களோடு உரையாடிய இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். பொதுவாகவே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தனது நடனத்தின் மீது பெரும் ஆர்வம் உண்டு. விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் இயக்குனராவதற்கு முன்பே மாரி செல்வராஜ் நடனம் ஆடிய வீடியோவில் இருந்து அவரது படங்களின் படப்பிடிப்பில் அந்த யதார்த்தமான நடனத்தை கற்றுக் கொடுப்பது வரை மாரி செல்வராஜின் நடனத்தின் மீது ரசிகர்களுக்கும் தனி கவனம் உண்டு. அந்த வகையில் இந்த நேர்காணலில் "நீங்கள் இவ்வளவு ஆழமாக பேசுகிறீர்கள் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் ஆனால் உங்களை டான்ஸர் என சொல்கிறார்கள். நடனத்தில் உங்களுக்கு மிகவும் ஆர்வம் என சொல்கிறார்கள்.. உண்மையா அது?" எனக் கேட்டபோது,


“நல்ல டான்ஸரா தெரியாது.. உனக்கு எந்த என்டர்டைன்மெண்ட்மே கிடையாது. எங்கேயோ கேட்கிற ஒரு பாடல் தான்… எங்கள் ஊரில் இருந்து தள்ளி நான் அதிகமாக காட்டில் தான் இருப்பேன். காட்டில் ஆடு மாடு தான் மேய்த்துக் கொண்டிருப்பேன். அப்போது எங்கிருந்தோ வரும் ஒரு பாட்டு தான் எனக்கு நண்பன் மாதிரி.. தனிமையில் இல்லை என்பதை எங்கிருந்தோ ஒரு பாடலின் இசை தான் உணர வைக்கும். அது ரொம்ப தெளிவாக கேட்கும்… அது ரொம்ப தூரத்தில் இருக்கும் ஆனாலும் எனக்கு தெளிவாக கேட்கும். இப்போது படம் பார்க்கிற மாதிரி அப்போது படம் எல்லாம் பார்க்க முடியாது. பாட்டு முன்பே வந்துவிடும் ஆனால் அந்த பாட்டின் வீடியோவை நாம் பார்ப்பதற்கு ரொம்ப நாள் ஆகிவிடும். மேலும் என்னுடைய வாழ்க்கை முறையில் எங்கள் ஊரில் ஒரு தியேட்டருக்கு போய் படம் எல்லாம் பார்ப்பது என்பது அமெரிக்கா போவது மாதிரி தான். ரொம்ப கஷ்டம். நாங்கள் ரொம்ப லேட்டாக தான் படம் பார்ப்போம். நூறு நாட்கள் ஆன பிறகு தான் அந்த படத்தை பார்க்க முடியும். ஆனால் அதற்கு முன்பே இந்த பாடல்கள் எல்லாம் ஹிட்டாகி இருக்கும். அந்த பாட்டுடைய வீடியோவை நானே யோசிக்க ஆரம்பித்து அந்தப் பாடல்கள் வரும் போது அதை நாங்களே ப்ராசஸ் பண்ண ஆரம்பித்து விடுவோம்.” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் அந்த சிறப்பு நேர்காணலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.