கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தனக்கே உரித்தான ஸ்டைலில் மிக அழுத்தமான உணர்வுபூர்வமான கதை களமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தனது தொடக்கத்திலேயே தான் எப்படிப்பட்ட ஒரு படைப்பாளி என்பதை பதிவு செய்த இயக்குனர் மாரி செல்வராஜ், தனது அடுத்த படைப்பாக நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்த கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டுமொரு அழுத்தமான படைப்பாக ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கர்ணன் திரைப்படம்.

இந்த வரிசையில் மூன்றாவது திரைப்படமாக மாமன்னன் திரைப்படத்தை உருவாக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமாக தற்போது வாழை திரைப்படம் தயாராகி வருகிறது. நான்கு சிறுவர்கள், நடிகர் கலையரசன் வாழை திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதனை அடுத்து அர்ஜுனா விருது பெற்ற இந்தியாவின் கபடி விளையாட்டு வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகும் புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதல் முறை உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், வைகைப்புயல் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வரும் மே மாதம் 12ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் அனைத்திந்திய தனுஷ் தலைமை நண்பர்கள் மன்றம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், ஃபகத் பாஸில் அவர்களோடு இணைந்து பணியாற்றியது குறித்து கேட்டபோது, "அதுதான் சொல்கிறேனே வடிவேலு சார், ஃபகத் சார் என மாறுபட்ட நடிகர்களை ஒரே ஃப்ரேமில் வைத்து பார்க்கும் போது புது அனுபவமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வடிவேலு சார், ஃபகத் சார், உதய் சார் எல்லோரும் வெவ்வேறு கட்டத்தில் இருப்பார்கள் இவர்கள் அனைவரையும் ஒரு ஃபிரேமிற்குள் கொண்டு வந்து ஒரு எமோஷனுக்குள் கொண்டு வரும்போது நிச்சயமாக அது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்" என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜின் அந்த முழு பேட்டி இதோ…