எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி ரிலீசான அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பக்கா மாஸ் என்டர்டெய்னர் திரைப்படமாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் ஆக்ஷன் காட்சிகள் உருவான விதம் குறித்து மனம் திறந்து பேசினார்.

அந்த வகையில், இயக்குனர் H.வினோத் அவர்கள் நிறைய பேட்டிகளில், “அந்த JET SKI காட்சிகளை படமாக்கும் போது மஞ்சு வாரியர் அவர்களுக்கு சரியாக ஓட்ட தெரியாததால் என்னமோ தெரியவில்லை அவர் மிகவும் வேகமாக ஓட்டிவிடுவார், அதை படம் பிடிப்பதே மிக கடினமாக இருந்தது” என தெரிவித்துள்ளார். அந்த அனுபவம் எப்படி இருந்தது? என கேட்டபோது,

“JET SKI வந்து அப்போதுதான் ஷாட்டிற்கு கொஞ்சம் நேரத்திற்கு முன் தான் கற்றுக்கொண்டேன். அதுவும் வெளிச்சம் இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும் அடுத்து 5-10 நிமிடங்களில் போய்விடும் அதன் பிறகு படமாக்க முடியாது, அதற்குள் அதை கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என இருந்தது. இது மாதிரியான சூழ்நிலைகளில் வேறு எந்த வழியும் கிடையாது. கண்ணை மூடிக்கொண்டு நாம் செய்ய வேண்டியது தான். அதைத்தான் நினைத்தேன். வேறு எதையும் நினைக்கவில்லை. LIFE JACKET என பாதுகாப்பு விஷயங்கள் எல்லாம் இருந்தது. எனவே வருவதை வரும் வழியில் பார்த்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டு இறங்கிவிட்டேன். அந்தப் படகு ஓட்டுவது கூட எனக்கு அப்போது தெரியாது. அப்போது தான் அந்த ஷாட்டிற்கு முன்பாக கற்றுக் கொடுத்தார்கள். அந்த ஷாட்டிற்கு தேவையான போது, அதை செய்தேன். வேற எந்த விளக்கமும் இல்லை” என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம், “நாங்கள் அதை பார்க்கும் போது நீங்கள் அதை தெரியாமல் செய்கிறீர்கள் என்றெல்லாம் தெரியவில்லை நீங்கள் அதை மிகவும் நம்பிக்கையோடு செய்கிறீர்கள் என்பது போல தான் இருந்தது அதுதான் முக்கியம் என நினைக்கிறோம்” என தெரிவித்த போது, “முகத்தில் மிகவும் நம்பிக்கையோடு இருப்பது போல வைத்துக் கொள்வது, நமக்கு தெரியாத ஒரு காரியத்தை செய்யும் போது கூட எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல நடித்து செய்ய வேண்டும் அல்லவா! அதுதான் ரொம்ப கஷ்டம். ஆனால் அந்த காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. அஜித் சார் மற்றும் இயக்குனர் ஒவ்வொருவரும், சிறப்பாக இருந்தார்கள். அது அசுரனாக இருந்தாலும் சரி துணிவு படத்திலும் சரி ஒரு அற்புதமான குழுவுடன் பணியாற்றினேன் என்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என உணர்கிறேன்” என பதில் அளித்துள்ளார். மஞ்சு வாரியரின் அந்த முழு பேட்டி இதோ…