தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக பல முன்னணி ஜாம்பவான்களும் முயற்சி செய்து கைவிட்ட பொன்னியின் செல்வன் நாவலை தனது கடின உழைப்பால் நிஜமாக்கியவர் இயக்குனர் மணிரத்னம். ஏற்கனவே 2010 காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க கிட்டத்தட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் மணிரத்னம் செய்த நிலையில், அப்போது சில காரணங்களால் திரைப்படம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் மிகக் கடினமான சூழ்நிலையிலும் விடாமுயற்சியோடு போராடி இந்த பொன்னியின் செல்வன் எனும் கனவு படைப்பை நனவாக்கி இருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பிரம்மாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரானது.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் அவர்களின் பட்டத்தொகுப்பில் உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் 1 பட வெற்றியைத் தொடர்ந்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. எழுத்தாளர்கள் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று புனைவு நாவல். உலக அளவில் பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த நாவலை திரை வடிவமாக மாற்ற இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து இந்தப் பொன்னியின் செல்வன் திரைக்கதையை அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் நாவலை மக்கள் கொண்டாடுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதன் கதாபாத்திரங்கள் தான். அந்த வகையில் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாளை மார்ச் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் சீயான் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலனின் புதிய பிரமோ வீடியோ தற்போது வெளியானது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய பகுதியான கடம்பூர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலன் வருகை தரும் நிகழ்வை குறிக்கும் வகையில் இந்த ப்ரோமோ இருப்பதாக தெரிகிறது. அட்டகாசமான அந்த புரோமோ இதோ…