உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களாலும் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து தமிழ் சினிமாவிலேயே 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்ட பொன்னியின் செல்வன் எனும் பெரும் கனவை 30 ஆண்டுகளுக்கும் மேல் சுமந்த இயக்குனர் மணிரத்னம் தற்போது நனவாக்கி இருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்தார். வழக்கம்போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மற்றொரு தளத்திற்கு உயர்த்தினார்.

அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவல் ஒரு வரலாற்றுப் புனைவு நாவலாகும். உலகம் முழுக்க பல கோடி வாசகர்களின் மனதை வென்ற இந்த பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கடந்த ஆண்டில் வெளிவந்து 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் அதற்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடியை கடந்த நிலையில், விரைவில் 500 கோடி இலக்கையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெளி வந்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மூன்றாவது வாரத்திலும் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கியமான ஒரு தருணத்தில் மக்களின் மனதை வருடும் இளையோர் சூடார் எனும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இசைப்புயலின் இசையில் வெளிவந்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இளையோர் சூடார் லிரிக் வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.