தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாகவும் சிறந்த நடிகராகவும் வலம் வரும் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் துணை நடிகராகவும் குறும்படங்களில் நடித்தும் வந்த இவர் கடந்த 2010 ல் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்த்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை கவரும் விதமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்படி பீசா, சூது கவ்வும், இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் ஆகிய திரைப்படங்கள் விஜய் சேதுபதிக்கு ஏறுமுகமாக அமைந்தது. எந்தவொரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நேர்த்தியாகவும் தரம் குறையாமல் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு தமிழில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் தற்போது பட வாய்புகள் குவிந்து வருகிறது. நேர்த்தியான நடிப்பின் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் விஜய் சேதுபதி மக்களால் செல்லாமாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டு இன்று இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருகின்றார். கடந்த 2022 ஆம் ஆண்டில் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, இயக்குனர் சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘DSP ஆகிய திரைப்படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன.

அதை தொடர்ந்து தொடர்ந்து இந்த ஆண்டில் சந்திப் கிருஷ்ணன் நடித்து பான் இந்திய அளவு ரிலீஸ் ஆன மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ், காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும், இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கி இருக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் செதுபதியில் 50வது திரைப்படமான ‘VJS50’ என்ற படத்தை இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளார். கடந்த 2017ல் வெளியாகி விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட ‘குரங்கு பொம்மை’ படத்தையடுத்து இயக்குனர் நிதிலன் இயக்கவிருக்கும் விஜய் சேதுபதியின் 50 திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ‘பேஷன் ஸ்டுடியோ’ மற்றும் ‘தி ரூட்’ ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.