மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 38 வயதில் ஒரு பெண் 20 வது முறையாகத் தாய்மை அடைந்த நிகழ்வு வைரலாகி வருகிறது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டம், பெண்நாடோடி கோபால் சமூகத்தைச் சேர்ந்தவர் 38 வயதான லங்காபாய் காரத். தினக்கூலியாகச் சின்ன சின்ன வேலைகள் மட்டும் செய்து வரும் இவர்கள், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் குடிபெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அதனால், செல்லும் இடமெல்லாம் குடிசை அமைத்து தங்களது வாழ்வாதாரத்திற்கான வேலைகளைச் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், லங்காபாய் காரத் தற்போது 20 ஆவது முறையாகத் தாய்மை அடைந்துள்ளார். தற்போது 11 குழந்தைகள் உள்ள நிலையில், இதுவரை இவருக்கு 16 முறை பிரசவம் நடந்துள்ளது. அதுவும், இதுவரை நடைபெற்ற 16 பிரசவங்களும் வீட்டிலேயே வைத்து நடந்துள்ளது. அதில், 5 பிரசவத்தில் குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 3 முறை இவருக்குக் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது 20 வது முறையாக அந்த பெண் தாய்மை அடைந்துள்ளது மருத்துவர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

38 வயதில், 20 வது முறையாகப் பெண் தாய்மை அடைந்தது தொடர்பாகப் பேசிய மஹாராஷ்ட்ரா மாநில மருத்துவர்கள், “லங்காபாய் 20 வது முறையாகத் தாய்மை அடைந்தது தெரிய வந்ததையடுத்து, அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதில், அந்த பெண் 7 மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது தாயும், சேயும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக அவர் கூறினார். மேலும், குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அரசு மருத்துவ மனையில் அனுமதிக்குமாறு வலியுறுத்தி உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இதனிடையே, 38 வயதில் பெண் ஒருவர் 20 வது முறையாகத் தாய்மை அடைந்துள்ள செய்தி, இந்தியா முழுவதும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.