பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கே.புதூரை அருகேயுள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து- சுந்தரி தம்பதியின் 2வது மகள் அர்ச்சனா. அவளுக்கு வயது 16. அவர். அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரக் காலமாகப் பள்ளிக்கு வராமல் இருந்த அர்ச்சனா, இன்று காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு முதல் ஆளாக வந்துவிட்டாள். அப்போது யாரும் இல்லாத வகுப்பறைக்குள் சென்ற அவர், தன் கொண்டு வந்த அம்மாவின் புடவையை, பள்ளி வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் மாட்டித் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறிது நேரம் கழித்து, வகுப்பறைக்குள் வந்த சக மாணவிகள், இதைப் பார்த்ததும் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசாருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ்காக காத்திருந்தனர். ஆனால், வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், இரு சக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் செல்ல போலீசார் முற்பட்டனர். ஆனால், அதற்குள் மாணவியின் பெற்றோரும், அவரது உறவினர்களும், வாகனத்திற்கு வழி விடாமல், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்குப் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து, பள்ளியின் வாயிற்கதவு மூடப்பட்டு, பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அர்ச்சனா ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை என்பதும், வீட்டிலிருந்து வரும் போதே அவர், தற்கொலை எண்ணத்துடன் தான் வந்திருப்பதாகவும், இதற்காக தன்னுடைய அம்மாவின் சேலையையே பள்ளிக்கு அவர் எடுத்து வந்திருக்கிறார் என்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

மேலும்,அர்ச்சனா ஏன் தற்கொலை செய்தார்? ஒரு வாரம் அவர் ஏன் பள்ளிக்கு வரவில்லை? வீட்டில் ஏன் இதைப் பற்றி அவர் பேசவில்லை? வரும்போதே அம்மாவின் புடவையைக் கொண்டு வர என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தான் தெரிய வரும். இதனிடையே மாணவி ஒருவர், பள்ளி வகுப்பறையிலேயே தற்கொலை செய்துகொண்டதால், சக மாணவிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.