இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் விஜய் ஆண்டனி அவர்களின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்த விஜய் ஆண்டனி “நான்” திரைப்படத்திலிருந்து நடிகராகவும் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் காக்கி, அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், வள்ளி மயில் என வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் முதல் முறையாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்து இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். பின்னர் சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளார்.

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில், காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைத்துள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாக இருந்தது. ஆனால் மாங்காடு மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது தயாரிப்பில் வெளிவந்த “ஆய்வுக்கூடம்” திரைப்படத்தின் கதை கருவையும் வசனங்களையும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்து படத்திற்கு தடை விதிக்க கோரி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். எனவே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இதனை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது விஜய் ஆண்டனி அவர்களின் சார்பில் பேசிய வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன் அவர்கள் “மூளை மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான திரைப்படங்கள் உலகெங்கும் பல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன அவற்றில் பல படங்கள் ரிலீஸுமாகி இருக்கின்றன” என குறிப்பிட்டதோடு, “விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகி இருப்பதால் விஜய் ஆண்டனி அவர்களுக்கு இதன் மூலம் மிகப்பெரிய நிதி இழப்பு” ஏற்பட இருப்பதாகவும் குறிப்பிட்டு பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி கோரினார். இந்நிலையில் வழக்கை முழுவதுமாக விசாரித்த உயர்நீதிமன்றம் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 உலகெங்கும் திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாவது உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.