சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ளார்.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கடந்த மாதம் 28 ஆம் தேதி பரிந்துரை செய்தது.

அதேபோல், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், தன்னை மேகாலயாவுக்கு மாற்ற வேண்டாம் என்று தஹில் ரமானி கொலிஜியத்தை கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தஹில் ரமானியின் கோரிக்கையை, கொலிஜியம் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி தஹில்ரமானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ளார் என்றும், அதன் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் மற்றும் ராஜினாமா குறித்து ஆலோசிக்க வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், வரும் 9 ஆம் தேதி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட தேர்தல் குழுவிற்குச் சங்க நூலகர் ராஜேஷ் கடிதம் அனுப்பி உள்ளார்.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, தஹில்ரமானி ஓய்வு பெற இருக்கும் நிலையில், தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.