மத்தியப் பிரதேசத்தில் மழை காரணமாகத் தவளைகளுக்கு விவாகரத்து செய்துவைக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நமது மரபுப்படி பழமையான பல்வேறு சடங்கு முறைகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு நிகழ்வு தான் தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வந்துள்ளது. இதனால், போபால் நகரில் வசிக்கும் மக்கள், மழை பெய்ய வேண்டிக் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி, இரண்டு தவளைகளைப் பிடித்து வந்து, ஊர் மக்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், மழை அளவு வழக்கத்தை விட அதிகமாகப் பெய்துள்ளது. எந்த அளவுக்கு என்றால், போபால் நகரே மழை வெள்ளத்தில் மூழ்கும் அளவுக்கு மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு 26 சதவீதம் மழை பெய்துள்ளதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த மாநிலத்தில் உள்ள நர்மதா நதி, அபாய கட்டத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, மழை நிற்க வேண்டி, திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

திருமணம் செய்து வைத்த அதே தவளைகளைத் தேடிப் பிடிக்க முடியாது என்பதால், இரண்டு தவளை பொம்மைகளை வைத்து, இரு தவளைகளுக்கும் விவாகரத்து சடங்கு நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, மத்தியப் பிரதேசத்தில் மழையால் தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைக்கப்பட்ட சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.