தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான மறைந்த கேவி ஆனந்த் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி பின் கடந்த 2010 ல் வெளியான அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரிச்சர்ட் நாதன். முதல் படத்திலே ரங்கநாதன் தெருவை கச்சிதமாக படமாக்கி அந்த படத்திற்கு பல சுவாரஸ்யங்களை கொடுத்து ரசனை மிக்கதாய் மாற்றி கவனம் பெற்றார் ரிச்சர்ட். பின் தமிழ் சினிமாவில் வாய்புகள் குவிய தற்போது ரிச்சர்ட் தமிழ் சினிமாவில் குறிப்பிடும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அவர் ஒளிப்பதிவில் கோ, பானா காத்தாடி, வணக்கம் சென்னை, கோமாளி, மாநாடு, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள பொம்மை படத்தில் பணியாற்றி முடித்துள்ளார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் கடந்த ஜூன் 1ம் தேதி புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை சுமார் 15 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளார். புத்தம் புது கார் தற்போது அவருக்கு சுமையாக மாறி விரக்தியில் கொண்டு போய் சேர்த்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில்,

15 மாத காத்திருப்பிற்கு பிறகு இந்த காரை ஜூன் 1 ம் தேதி வாங்கினேன். ஜூன் 2ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதில் இன்னும் பதிவு எண் கூட ஓட்டப் படவில்லை. பின் ஜூன் 5ம் தேதி இந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன். சென்னையில் பரபரப்பான சாலைகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே இந்த கார் பழுதாகி நின்றது. இது குறித்து உடனடியாக கார் சர்வீஸ் ஊழியர்களை தொடர்பு கொண்டேன். ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. அவர்கள் இது குறித்து போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்.

எனக்கு இப்போது இந்த கார் வேண்டாம். நான் செலுத்திய முழு பணம் எனக்கு வேண்டும். வெறும் 3 நாட்களிலே பழுதான கார் மீண்டும் வேலை செய்யும் என்று என்ன உத்திரவாதம்.. இது நீண்ட நாள் எப்படி உழைக்கும்? என்று விரக்தியில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கிடைக்க வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ரிச்சர்ட் அவருடைய பழுதான கார் முன் நடுரோட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.