இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வைகைப்புயல் வடிவேலு இணைந்த நடித்த மாமன்னன் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் நாயகுடு என வெளியாகும் தெலுங்கு வெர்ஷனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனது முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தன்னை மிகவும் பாதித்த சமூக நீதி விஷயங்களை மிகவும் அழுத்தமாக பேசும் மாறி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அவர் பக்கம் திருப்பியது. தொடர்ந்து இரண்டாவது படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய கர்ணன் திரைப்படம் பெரும் பாராட்டுகளை பெற்றதோடு வர்த்தக ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. இந்த வரிசையில் அடுத்ததாக தனது மூன்றாவது படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய படம் தான் மாமன்னன்.

தமிழ் சினிமாவில் இதுவரை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். எனவே முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகி மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே மாமன்னன் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு கவனம் திரும்ப, வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடிப்பதாக வெளிவந்த அறிவிப்பு இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. மேலும் புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷும் மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாசிலும் இணைய ரிலீசுக்கு முன் நாளுக்கு நாள் மாமன்னன் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. இவை அனைத்திற்கும் மேலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் பாடல்களால் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடிக்க காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக கடந்த ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில் செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மாமன்னன் பட குழுவினர் அன்பு பரிசாக மினி கூப்பர் கார் ஒன்றை பரிசளித்தனர். தொடர்ந்து வைகைப்புயல் வடிவேலு அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்படம் தற்போது தெலுங்கில் நாயகுடு என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் வெற்றி பெற்றது போலவே தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏசியன் சினிமாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட வருகிற ஜூலை 14ஆம் தேதி மாமன்னன் தெலுங்கு வெர்ஷனான நாயகுடு ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…