இந்திய சினிமாவில் மிக முக்கயமான இயக்குனரான வெற்றிமாறன். அசுரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பின் நகைச்சுவை நடிகரான சூரியை கதையின் நாயகனாக மாற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விடுதலை’. ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இரண்டு பாகங்களாக உருவான விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. காவல் துறைக்கும் மக்கள் படைக்கும் இடையே உள்ள போராட்டத்தை திரைக்கதை களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் சூரி அவர்களுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன், சேத்தன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். முன்னதாக விடுதலை பட முதல் பாகத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.

படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் படம் திரையரங்குகளுக்கு செல்வதற்கு முன் படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது, அதில் படத்தில் இடம் பெற்றுள்ள ஏராளமான கெட்டவார்த்தைகள் மற்றும் சில காட்சிகள் நீக்கும் படி பரிந்துரை செய்துள்ளது தணிக்கை குழு. மேலும் விசாரணையின் போது சில பாகங்கள் காட்சிப்படுத்துவதையும் சில காட்சிகளில் உள்ள அவதூறுகளையும் நீக்க பரிந்துரைத்தது. இதையடுத்து விடுதலை முதல் பாகத்திற்கு சிபிஎஃப்சி குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதும். விடுதலை முதல் பாகம் மொத்த ரன்னிங் டைம் 145.37 நிமிடங்களை கொண்டுள்ளது. அதாவது 2.25.37 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே வெற்றிமாறன் திரைப்படங்களில் கெட்ட வார்த்தைகள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அவையெல்லாம் கதைக்கும் காட்சிக்கும் ஏற்றதாகவே இருக்கும் . ஒவ்வொரு முறையும் வெற்றி மாறன் திரைப்படங்கள் தணிக்கை குழுவில் சிக்கலை சந்தித்து வருவது வழக்கம். இந்த படமும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடதக்கது.விடுதலை படத்திற்கு சென்சார் குழு அளித்த சான்றிதழ் தற்போது ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றன.