தளபதி விஜயின் பிறந்த நாளான நாளை ஜூன் 22 ஆம் தேதி லியோ திரைப்படத்தின் "நா ரெடி" பாடல் அவரது பிறந்த நாள் பரிசாக ரிலீஸாக இருக்கும் நிலையில் மற்றொரு பெரிய சர்ப்ரைஸாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிளடி ஸ்வீட்டான ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது.

தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். முன்னதாக தொடர்ந்து 50 நாட்கள் காஸ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி” எனும் பாடல் நாளை அவரது பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகிறது.

தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோளார் இணைந்து இணைந்து பாடி இருக்கும் இப்பாடலின் ப்ரோமோ நேற்று ஜூன் 20 ஆம் தேதி வெளிவந்தது. "நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் எறங்கி வரவா!" என தளபதி குரலில் அதிரடியாக வரும் இப்பாடல் தளபதி விஜயின் பிறந்தநாள் பரிசு என ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருந்த நிலையில் மற்றொரு ஸ்பெஷல் பரிசாக நாளை லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பிளடி ஸ்வீட்டான அறிவிப்பை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். நள்ளிரவு சரியாக 12:00 மணி அளவில் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்த அந்த அறிவிப்பு இதோ…