ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியின் லியோ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். தளபதி விஜயின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் படமாக லியோ படம் பெரும் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தளபதி விஜயின் லியோ படத்திற்கான அதிகாலை 4AM சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் 7AM மணி காட்சிக்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து அனுமதி கிடைக்குமா என்று படக்குழுவினரும் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் கலந்து கொண்டு உரையாடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “தற்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட களத்தில் பணியாற்றுகிறீர்கள். ஹாலிவுட் ஜானரில் இருக்கக்கூடிய படங்களை நமக்கு தகுந்த மாதிரி உருவாக்குகிறீர்கள். இது போதுமா?” எனக் கேட்டபோது, "ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாமே ஒரு வித சோர்வை கொடுத்து விடும். இப்போதைக்கு இந்த திரைப்படங்கள் எல்லாம் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது. இந்த கதைகளை யோசிக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. சொல்லும் போது உற்சாகமாக இருக்கிறது எழுதும் போது உற்சாகமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களிடமும் நடிகர்களிடம் சொல்லும் போதும் உற்சாகமாக இருக்கிறது. நான் எப்போதும் சொல்வது போல் தான், இந்த உற்சாகத்தை பகிர்ந்து கொள்வது என்பது ரசிகர்கள் வரைக்கும் இருக்கிறது. ஒருவேளை இப்போது ரசிகர்களுக்கும் என் படங்களை பார்ப்பது பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்… அப்போது ஒரு பிரேக்கிங் பாயிண்ட் வரும் அல்லவா!, “இவன் இதே மாதிரி தான் படம் எடுத்துக் கொண்டிருப்பான்” என்று அப்போது நான் அந்த மாற்றத்தை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்து இந்த ஒரு ஆக்சன் மூடில் கதை சொல்வது என்பது... அது கொடுக்கும் உச்சத்தை வேறு எந்த ஜானரும் கொடுக்கும் என தெரியவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் அதை நான் எடுக்கப் போவதுமில்லை. இப்போது பார்த்தீர்கள் என்றால் நான் ஒரு ஹாரர் கதை எழுதி இருக்கிறேன். ஆனால் அதை நான் இயக்க விரும்பவில்லை. அதனால் நான் அதற்காக வேறு ஒருவரை அழைத்து அவரை இயக்கச் சொல்கிறேன். அதனால் அதை இயக்குனர் ரத்னகுமார் இயக்குவதாக இருக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்க் காணலாம்.