இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் இந்த லியோ திரைப்படத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறது என சொல்லும் அளவிற்கு சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் கலந்து கொண்டு உரையாடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “ஹாரர் திரைப்படங்களை இயக்க விரும்பாதது ஏன்?” என்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார் அப்படி பேசுகையில், “எனக்குத் தெரிந்து இந்த ஒரு ஆக்சன் மூடில் கதை சொல்வது என்பது... அது கொடுக்கும் உச்சத்தை வேறு எந்த ஜானரும் கொடுக்கும் என தெரியவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் அதை நான் எடுக்கப் போவதுமில்லை. இப்போது பார்த்தீர்கள் என்றால் நான் ஒரு ஹாரர் கதை எழுதி இருக்கிறேன். ஆனால் அதை நான் இயக்க விரும்பவில்லை. அதனால் நான் அதற்காக வேறு ஒருவரை அழைத்து அவரை இயக்கச் சொல்கிறேன். அதனால் அதை இயக்குனர் ரத்னகுமார் இயக்குவதாக இருக்கிறது. என்றார். தொடர்ந்து அவரிடம், “ஏன் அந்த படத்தை நீங்கள் இயக்கவில்லை? அது உங்களுக்கு அந்த ஒரு உச்சத்தை கொடுக்கவில்லையா?” எனக் கேட்டபோது, “எனக்கு அந்த படத்தில் இருக்கும் ஜம்ப் ஸ்கேரை என்னால் சரியாக எடுத்து விட முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு வராத ஒரு விஷயத்தை போய் நான் முயற்சி செய்ய வேண்டும். மேலும் எனக்கு அந்த கதையில் ஒரு சின்ன பயம் இருக்கிறது எனவே அதை சரியாக எடுக்கக்கூடிய யாராவது ஒருத்தர் எடுத்தால் சரியாக இருக்கும் எப்படி நான் ரொமான்டிக் படங்களை எடுக்காமல் இருக்கிறேனோ அது மாதிரி.” என்றார்.

தொடர்ந்து அவரிடம், "நீங்கள் இயக்குனர் ஆவதற்கு முன்பு இயக்குனர்-ஆக முடியும் என்றே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருக்காது. அப்படி இருந்து இப்போது இயக்குனராகி இருக்கிறீர்கள் அப்படி இருக்கும்போது ஏன் இதை முயற்சி செய்து பார்க்கக் கூடாது?" எனக் கேட்டபோது, “நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நான் வேலை பார்த்த நிறுவனத்தில் கார்ப்பரேட் விளம்பர படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதில் பெரிய நட்டம் என்று எதுவும் வரப்போவதில்லை நட்டம் என்று சொல்ல வேண்டுமென்றால் அது எங்களுடைய நேரமும் உழைப்பு மட்டும்தான். யாருடைய பணமும் விரயமாக போவதில்லை. ஆனால் சினிமாவில் அப்படி இல்லையே என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுகிறார். அப்போது இன்னும் பொறுப்பு கூடுகிறது எனவே எதெல்லாம் ரசிகர்களிடம் சென்று சேரும் சேராது என்பதை எல்லாம் பார்த்து எதெல்லாம் போட்ட காசை திரும்ப எடுத்துக் கொடுக்கும் என எல்லாவற்றையும் கணக்கிட்டு வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் இதை செய்யவில்லை" என பதில் அளித்து இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த ஸ்பெஷல் பேட்டி இதோ...