தன்னம்பிக்கைக்கு அடையாளமாகவும் கடின உழைப்பால் உச்சத்தை தொட முடியும் என மக்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்பவர் லெஜண்ட் சரவணன் அவர்கள். தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து தற்போதைய சூழ்நிலையில் பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் அந்தந்த நிறுவனத்தின் விளம்பர படங்களில் தாங்களே நடிக்கும் ட்ரெண்ட்டுக்கு விதை போட்டவர் லெஜண்ட் சரவணன் தான். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் மூலம் தன்னிகரற்ற உச்சத்தை வெற்றியை தொட்ட லெஜண்ட் சரவணன் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார்.

தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடிக்கும் சமயங்களில் தன் மீது எறியப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினார் லெஜண்ட் சரவணன். முன்னதாக தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய லெஜண்ட் சரவணன், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸின் முதல் படமாக தயாரித்த தி லெஜண்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை லெஜன்ட் சரவணன் பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும். தி லெஜண்ட் படத்தின் பணிகள் தொடங்கிய சமயத்தில் இருந்தே அதிகமாக பேசப்பட்டது. ரிலீசுக்கு முன்பே தி லெஜண்ட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி ரிலீஸான போது ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜே.டி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்க லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக நடித்த தி லெஜன்ட் திரைப்படத்தில் கீர்த்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரௌட்டெல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். சிவாஜி படத்தில் ஆதிகேசவனாக மிரட்டிய நடிகர் சுமன் வில்லனாக நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நாசர் இளைய திலகம் பிரபு, விஜயகுமார், லதா, சச்சு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, மயில்சாமி, முனீஸ் காந்த், சிங்கம் புலி, லிவிங்ஸ்டண், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தீபா சங்கர், பெசன்ட் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் நடிகைகள் யாஷிகா ஆனந்த் மற்றும் ராய் லக்ஷ்மி ஆகியோர் தலா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் & ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படம் வெளியான அனைத்து பகுதிகளிலும் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. முன்னதாக ரிலீஸுக்கு பிறகான தி லெஜண்ட் திரைப்படத்தின் OTT ரிலீஸ் காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு பரிசாக தி லெஜண்ட் திரைப்படம் நாளை மார்ச் மூன்றாம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என நாளை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த அந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ…