போதையில் மகள்களைத் தந்தை ஆற்றில் வீசி சென்றதால், தாய் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்த பாண்டி - ரேணுகா தேவி தம்பதியினருக்கு 3 பெண்கள் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், கணவன் - மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகள்களான லாவன்யா, ஸ்ரீமதி ஆகிய இருவரையும் தந்தை பாண்டி, அருகில் உள்ள அரசலாற்றுப் பாலம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது போதையிலிருந்த பாண்டி, பாலத்தின் அருகில் சென்றதும், தனது 2 மகள்களையும் கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் தள்ளி உள்ளார். ஆற்றில் விழுந்த லாவன்யா, சத்தம் போட்டுக் கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, ஆற்றில் குதித்து லாவண்யாவை மீட்டுள்ளனர். ஆனால், ஆற்றில் விழுந்த ஸ்ரீமதியின் நிலை தற்போது என்னவென்று தெரியவில்லை.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஆற்றில் விழுந்த திருமதியைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மகளை இழந்து மன உளைச்சலுக்கு ஆளான தாய் ரேணுகா தேவி, வீட்டைப் பூட்டி விட்டு தீ குளித்துள்ளார். வீட்டில் தீ பற்றி எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்துக்கொண்டு வந்து, ரேணுகா தேவியை மீட்டு, கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, போதையில் 2 மகள்களைத் தந்தை ஆற்றல் தூக்கிய வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.