தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சேனல்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. அதிலும் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் எப்போது உண்டு. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக தொடர்ந்து விஜய் டிவியில் வெற்றி நடை போட்டு வருகிறது. கலகலப்பான சமையல் நிகழ்ச்சியாக ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அஸ்தான நடுவர்களாக புகழ்பெற்ற சமையல் நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுநிலையோடு நீதிபதிகளாக இருக்க , ரக்ஷன் தொகுப்பாளராக தொடர்ந்து 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன. குக் வித் கோமாளி சீசன் 1ல் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டிலை தட்டிச் சென்றார். தொடர்ந்து சீசன் 2ல் கனி மற்றும் சீசன் 3ல் ஷ்ரூத்திகா ஆகியோர் டைட்டிலை வென்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கப்பட்டது. இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக ஆண்ட்ரேன் நோக்ரியாட், ஜிகர்தண்டா நடிகர் காளையன், இயக்குனரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார், வலிமை பட நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷெரின், நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நடிகை விசித்ரா, VJ விஷால் ஆகியோருடன் கோமாளியாக இதுவரை கலக்கிய சிவாங்கி போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

மேலும் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், குரேஷி, சுனிதா, GPமுத்து, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர். வழக்கம்போல் அட்டகாசமாக நடைபெற்ற இந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் சுற்று கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த முதல் எலிமினேஷனில் நாய் சேகர் திரைப்படத்தின் இயக்குனரும் பிரபல நடிகருமான கிஷோர் ராஜ்குமார் எலிமினேட்டாகி வெளியேறினார். இந்நிலையில் முதல் எலிமினேஷனில், “சிவாங்கியை அனுப்பாமல் என்னை ஏன் வெளி அனுப்பினீர்கள்?” என இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் கோபமாக கேள்வி எழுப்பியதாக செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிஷோர் ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி தனது ஸ்டேட்டஸில், “இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை! நிறைய பொய்யான செய்திகள் சோசியல் மீடியாவில் பரவுவதை பார்க்கிறேன். அந்த பக்கங்களில் நான் கமெண்ட் செய்திருக்கிறேன். இருப்பினும் அவர்கள் அதை நீக்காமல் இருக்கிறார்கள். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்! குக் வித் கோமாளி எப்போதும் என்னுடைய ஃபேவரட்டான ஷோ! வைல்ட் கார்டில் சந்திப்போம்!!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். கடந்த ஓரிரு தினங்களாக சிவாங்கியை குறிப்பிட்டு போலியாக பரவி வந்த அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் பதிவிட்ட அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இதோ…