தமிழ் சினிமாவின் சம கால பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் லைகா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவானது. இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானாது. உலகளவில் மிகப்பெரிய அளவு வெற்றியை பெற்று தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு பெருமையை பெற்று தந்தது. மேலும் வசூல் அடிப்படையில் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பார்த்திபன், சரத்குமார் பிரகாஷ் ராஜ், ரகுமான் ஜெயராம், நிழல்கள் ரவி, அஷ்வின் காக்கமனு, சோபிதா மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் விழா நாயகர்கள் மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரகுமான் அவர்களுடன் படத்தில் நடித்த நடிகர்கள் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுடன் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல் ஹாசன், சிலம்பரசன், குஷ்பு, ரேவதி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய கமல் ஹாசன்,

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு காதலா? வீரமா எது காரணம் என்று பட்டிமன்றமே நடக்குது. ஆனால் இதுபோன்ற படம் எடுக்க தைரியம் வேண்டும்.. பொன்னியின் செல்வன் மீதான காதல் தான் அதற்கு காரணாமாக உள்ளது. அதன்படி இதில் வீரமும், காதலும் வெற்றிபெற்றுள்ளது. மணிரத்தினம் இருட்டுல படம் எடுப்பாரா? பொன்னியின் செல்வன் படம் அவரால் எடுக்க முடியுமா என்று துரைமுருகனுக்கு எழுந்த சந்தேகம் திரையுலகில் பலருக்கு எழுந்தது என்னவே உண்மை தான். அவரின் கனவு கலையாமல் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது வெற்றிகரமாக இரண்டாவது பாகம் நோக்கி செல்கிறது. எனவே இப்படம் சோழர்களின் பொற்காலம் மட்டுமல்ல.. தமிழ் திரையுலகின் பொற்காலமும் கூட.. அதை தூக்கி பிடிக்க காத்து கொண்டிருக்கிறோம்.” என்று கமல் ஹாசன் மேடையில் அரங்கம் அதிர தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மேடையை பகிர்ந்து கொண்டு அட்டகாசமான உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது, அதே மனநிலையை நேற்று ரசிகர்களுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் கொடுத்துள்ளார்.