சந்திரமுகி பார்ட் 2வில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தை சந்திரமுகி பார்ட் 1 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்த நடிகை ஜோதிகா வாழ்த்தியிருக்கிறார். சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று சந்திரமுகி 2. கடந்த 1993 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் தயாராகி வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் மணிசித்திரதாழ். மலையாளத்தில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளைய திலகம் பிரபு ஜோதிகா ஆகியோரது நடிப்பில் கடந்த 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் தயாரானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதையின் நாயகன் நாயகியாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் சந்திரமுகி பாகம் ஒன்றில் சந்திரமுகியாக நடித்த நடிகை ஜோதிகா சந்திரமுகி பாகம் 2 வில் சந்திரமுகியாக நடித்திருக்கும் நடிகை கங்கனா ராணாவத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் கங்கணா ரணாவத்தின் சந்திரமுகி 2 போஸ்டரை பதிவிட்ட நடிகை ஜோதிகா, “இந்திய சினிமாவில் அதிக திறமை கொண்ட ஒரு நடிகை சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் சந்திரமுகியாக அட்டகாசமாக இருக்கிறீர்கள் கங்கனா ரனாவத். உங்களது நடிப்பின் பெரிய ரசிகை நான் இந்த படத்தை உங்களுக்காகவே பார்க்க காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனர் பி.வாசு சார் உங்கள் இருவருக்கும் மற்றொரு பெரிய வெற்றி கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்” என பதிவிட்டு இருக்கிறார். நடிகை ஜோதிகாவின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இதோ…